மத்திய அரசு ஐந்து வருடம் நீடிக்குமா? மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கேள்வி!

வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சந்தா வழங்கும் விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

Update: 2024-07-29 02:41 GMT

நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

வந்தவாசியில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திருமதி மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தயாநிதி, இராணிபேட்டை மாவட்ட செயலாளர் காசிநாதன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் .சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தீக்கதிர் சந்தாக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்,

கம்யூனிசம் தலைமை தாங்கி புரட்சி நடத்திய அந்த சோவியத் நாட்டிலேயே நாம் கட்டமைத்த சோசியலிஸ்ட் சமூகம் சீரழிந்து கொண்டு போனது என்பது உலகம் அறிந்தது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி பெயரைக் கூட மாற்றி விட்டார்கள் என்ற செய்தி ஒரு காலத்தில் வந்தது. கம்யூனிசம் கல்லறைக்குச் சென்று விட்டது என ஏகாதிபத்தியவாதிகள் சொன்னார்கள் . இது கம்யூனிசத்தின் வீழ்ச்சியில்லை. கம்யூனிசம் கண்ட பின்னடைவு. இதில் படிப்பினைகளை கற்றுக்கொண்டு கம்யூனிசம் எழும் என மத்திய குழு அறிக்கை அப்போது சொன்னது.

தமிழ் தென்றல் திரு.வி.க பழுத்த ஆன்மீகவாதி காங்கிரஸில் குறிப்பாக காந்தியவாதியாக வாழ்ந்த அவர்தான் சிங்காரவேலரோடு சேர்ந்து 1918- 19 ஆம் ஆண்டு முதல் தொழிற்சங்கத்தை நிறுவினார். சைவ நெறிப்படியும் வைணவ நெறி படியும் வாழ்ந்த அவர் எல்லா மக்களுக்காகவும் வாழ்ந்தார். சாதி மதபேதமற்ற ஒற்றுமையுடன் அனைத்து மக்களும் வாழும் தத்துவத்தை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு புனிதமான சமுதாயமாக இந்த சமுதாயம் மாறும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது என்று அவர் அன்று எழுதினார்.

சிங்காரவேலர்தான் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டை நடத்தினார். சென்னையிலே முதன் முதலாக மே தின கொடியை ஏற்றியவர் சிங்காரவேலர். ஒரு தேர்தல் என்பது இந்த சமுதாயத்தை மாற்றி விட முடியாது. தேர்தல் வெற்றி தோல்வி மட்டுமே முக்கியமானது இல்லை. நமது பயணம் என்பது நெடியது. ஏகபோக முதலாளிகளை நில பிரபுத்துவவாதிகளை எதிர்த்து உழைப்பாளி மக்களை ஆட்சியில் அமர்த்தும் மகத்தான கடமை நமக்கு உண்டு. கடந்த தேர்தலில் நமது முக்கியமான கடமையாக இருந்தது பாஜகவை தூக்கி எறிவது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. அதை நோக்கி நாம் நகர்ந்ததால்தான் பாஜகவால் தனிப்பெரும் ஆட்சி அமைக்க முடியவில்லை. நிதிஷ்குமாரை வைத்து பிடித்த இந்த ஆட்சி 5 வருடம் நீடிக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது, என்று பேசினார்.

முன்னதாக, வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட தீக்கதிர் சந்தாக்களை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தீக்கதிர் நாளிதழ் பொது மேலாளர் பாண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News