வந்தவாசியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தலைமையாசிரியர் கைது
வந்தவாசியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ். இவர் நல்லூர் கிராமத்தில் உள்ள ஆர் சி எம் அரசு நிதி உதவி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்..
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல் புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பன் , மகள் சினேகா, டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.
சினேகாவிற்கு வருவாய்த் துறையில் கிளர்க் வேலை வாங்கித் தருவதாக அந்தோணி தாஸ் கூறியுள்ளார். இதையடுத்து சினேகாவிடம் இரண்டு தவணையாக அந்தோணி தாஸ் 4 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சினேகா பலமுறை கேட்டும் பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ், நிதியுதவி பள்ளியில் பணி மற்றும் வருவாய் துறையில் பணி, ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேரிடம் மொத்தம் ரூ. 18.10 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் மீது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா , எஸ்.ஐ. ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னாவரம் கிராமத்திலிருந்து நல்லூர் பள்ளிக்கு செல்ல பைக்கில் வந்தவரை புற்றுக்கோவில் அருகே மறைந்திருந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தோணி தாசை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் .
நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் சிறையில் அந்தோணி தாஸ் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தோணி தாஸ் விழுப்புரம் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.