வந்தவாசி அருகே செல்போன் டவரில் ஏறி அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை மிரட்டல்
வந்தவாசி அருகே செல்போன் டவரில் ஏறி அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக்கூறி போராட்டம் நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52), அரசு பஸ் டிரைவர். இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 90 சென்ட் நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தை கடந்த 2007-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். அப்போது 3 ஏக்கர் 90 சென்ட் நிலத்தையும் அவர் விற்றுவிட்டது போல் சிலர் மோசடி செய்ததாக தெரிகிறது.
மோசடி செய்து நிலத்தை வாங்கியவர்கள் மீதும், இடைத்தரகர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி ரமேஷ், போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மழையூரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக்கூறி போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீஸ் துணை சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் வடவணக்கம்பாடி போலீசார் மற்றும் பெரணமல்லூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வரவில்லை. அதைத் தொடர்ந்து செய்யாறு சப்-கலெக்டர் ந.விஜயராஜ் அங்கு சென்று, அவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரமேஷ் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.