திருவண்ணாமலை பக்தர்களை கவர்ந்திழுக்கும் விநாயகர் சிலைகள்!
திருவண்ணாமலை பக்தர்களை கவர்ந்திழுக்கும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.;
திருவண்ணாமலையில் பக்தர்களை கவர்ந்திழுக்கும் ஒரே இட த் தி ல் தயாரிக்கப்பட்ட 80 விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலையில் பத்து கை விநாயகர், உடுக்கை, சூலத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகர் என 80 சிலைகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விநாயகப் பெருமானின் பிறந்தநாள் என்றும் அழைக்கப்படும் விநாயக சதுர்த்தியை இந்துக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், பக்தியுடனும் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்தி பிரமாண்ட ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன . நாளை 7ந் தேதி விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவண்ணாமலை நகரில் இந்து முன்னணி சார்பில் 110 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 1000 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வேங்கிக்கால் அறிவியல் பூங்கா எதிரில் குறிஞ்சி நகரில் ஸ்ரீகாயத்திரி நிறுவனத்தில் நாலரை அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காகித கூழ், கிழங்கு மாவு, போன்ற தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பத்து கை விநாயகர், பின்னால் பெரிய சூலத்துடனும், உடுக்கை மீது உட்கார்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகர், நந்தி மற்றும் ஆஞ்சநேயர் சுமந்து வருவது போன்ற விநாயகர், யானை, சிங்கம், நந்தி மீது உட்கார்ந்திருக்கும் விநாயகர் என 35 வகை கொண்ட 80 விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சிலைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இது குறித்து ஸ்ரீகாயத்திரி காகித விநாயகர் சிலை தயாரிப்பு உரிமையாளர் சேகர் செய்தியாளரிடம் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள காகித சிலைகள், நீர் நிலைகளில் கரைப்பதற்கு உகந்தது ஆகும், இதனால் மீன்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ரூ.3 ஆயிரத்து 500லிருந்து ரூ.35 ஆயிரம் வரையில் எங்களிடத்தில் சிலைகள் விற்பனைக்கு உள்ளது என்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வதற்காக வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் எலி வாகன விநாயகர், மயில்வாகன விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குழந்தை விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், பஞ்சமுக விநாயகர், உள்ளிட்ட பல தரப்பட்ட விநாயகர் சிலைகளை சிலை வடிவமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விநாயகர் சிலைகள் செய்பவர்கள் கூறியதாவது:-
பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகளை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொண்ணூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள்,
கொரோனா காலகட்டத்தில் இருந்து சிலைகளின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் மூலப்பொருட்களின் விலை அதிகமானதாகும். மேலும் நீர் நிலைகளில் கரைப்பதால் தண்ணீர் மாசு ஏற்படாத வகையில் அட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் சிலை செய்வதற்கு அதிக நாள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பொதுவாக சிறிய சிலை முதல் பெரிய அளவிலான சிலைகள் அதற்கு தகுந்தார்போல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அதனை தயார் செய்து வருகிறோம்.
கடந்த சில வருடங்களாக சிலைகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு வகையான சிலைகள் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக சிலை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சிலை செய்பவர்கள் தெரிவித்தனர்.