தவளகிரீஸ்வரர் கோவில் மலையில் மீண்டும் காட்டுத்தீ
வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரீஸ்வரர் கோவில் மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டது.;
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த காட்சி.
வந்தவாசியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலையில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். பவுர்ணமி அன்று பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவர்.
வெண்குன்றம் மலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு இந்த மலையில் தீ விபத்து ஏற்பட்டது. மலைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீ தவளகிரீஸ்வரர் கோயில் கிரிவல குழு சார்பில் கடந்த 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு மலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் தீைய அணைக்க முயன்றும் முடியவில்லை. எனினும், தீ கொழுந்து விட்டு எரிந்தது.
தீவைக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், மலையை பாதுகாக்கக் கோரியும் அந்தக் கிராமத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்தும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மலையில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் மலை மீதுள்ள மூலிகைச் செடிகள், மரங்கள், பல உயிரினங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகி வருகிறது. எனவே வனப் பகுதியில் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.