வந்தவாசி அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

வந்தவாசி அருகே உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-21 06:52 GMT

உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை தொடங்கியது.

இதையொட்டி அங்கேயே சமைத்து உணவருந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து விடிய விடிய போராட்டத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்றும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் இன்று காலை வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், செய்யாறு துைண போலீஸ் சூப்பிரண்டு செந்தில், தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் விவசாயிகளை சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.   ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அருகில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறினர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை. விறுவிறுவென உயர்மின் கோபுரம் மீது சங்க கொடியுடன் ஏறிய 6 பேர், விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து அவர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் மீண்டும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இழப்பீடு வரும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News