வந்தவாசி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

வந்தவாசி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.;

Update: 2022-05-06 07:35 GMT

மின்னல் தாக்கி இறந்த  விவசாயி  கண்ணன்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மணிமங்கலம் மதுரா மேலந்தாங்கல் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 85), விவசாயி.

இவரது நிலத்தில் ஓலையில் கொட்டகை கட்டி அதில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம்.    நேற்று இரவு சூறாவளி காற்று வீசியதால் மாடு கட்டுவதற்காக சென்றார். அப்போது காற்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால் அங்குள்ள மரத்தின் கீழ் நின்றார். திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலசபாக்கம் பகுதியில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் கலசபாக்கத்தை அடுத்த மேல்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாச்சி என்பவரின் கன்று குட்டி மின்னல் தாக்கி பலியானது.   

அந்த நேரத்தில் கன்று குட்டிக்கு அருகில் நின்றிருந்த அண்ணாச்சி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சுப்பிரமணி என்பவருக்கு மின்னல் தாக்கி காயம் ஏற்பட்டது. தென்பள்ளிபட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மூர்த்தியின் பசுமாடு மின்னல் தாக்கி பலியானது.

Tags:    

Similar News