வந்தவாசி மற்றும் ஆரணி நகா் மன்றங்களின் அவசரக் கூட்டம்

வந்தவாசி மற்றும் ஆரணி நகராட்சி அலுவலகங்களில் நகா்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-22 06:36 GMT

வந்தவாசி நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜலால்  தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகா்மன்றக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா். ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் முன்னிலை வகித்தாா்.

இதில், நகரில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், பல்வேறு இடங்களில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா் வெ.ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துப் பேசினாா். அதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையர்  பேருந்து நிலையம் விரைவில் முழுமையாக செயல்பட துவங்கும் என தெரிவித்தார். பின்னா், வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும், வாா்டு குழுக்களை அமைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணியில் 33 வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 4 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர சபை தலைவர் ஏ. சி.மணி தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார். நகராட்சி அலுவலகத்திற்கு சுகாதார தனி அலுவலர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மோகனசுந்தரம் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டார். கூட்டத்தில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன் தீர்மானத்தை வாசித்தார். தமிழக அரசின் சார்பாக வார்டு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி கடிதம் வந்துள்ளது. ஆரணி நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் ஒவ்வொரு நகர மன்ற உறுப்பினர் தலைவராகவும், மக்கள் தொகை அடிப்படையில் 4 உறுப்பினர்களை இணைத்து 3 மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து தகவல்களை சேகரித்து நகர மன்றத்தில் உறுப்பினர் வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் நடராஜன் பேசுகையில் நாங்கள் தேர்வு செய்து கடந்த 6 மாதங்களாகவே உங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதில் புதிதாக ஒரு 4 நபர்களை உருவாக்கி அந்த பகுதியில் குறைகளை நிறைகளை கேட்டு எழுதித்தந்தால் மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள். விரிவாக்கப் பகுதிகளான சோலை நகர், மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் சாலை அமைக்கப்படவில்லை, கால்வாய் வசதியும் இல்லை, தெருவிளக்குகள் இல்லை இதை உடனடியாக செய்து தர வேண்டும் . என பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் ஆய்வாளர் மோகன், அங்குள்ள வீடுகளில் இருந்து வரித்தொகை வரப்பெற்றவுடன் கண்டிப்பாக அந்தப் பகுதியில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும் என பதிலுரைத்தார்.

மற்றொரு அ.தி.மு.க. உறுப்பினர் சமுத்திரிகா சதீஷ் பேசுகையில் ஆரணியில் உள்ள 5 அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற வேண்டும், அப்பகுதியில் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது, அவற்றினை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த நகர மன்ற தலைவர் மணி ஆரணி பகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் , மேலும் ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் புதிதாக தேவைப்படும் இடங்களில் வைக்கப்படும்.

நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு தேர்வு செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News