மதுபோதையில் டிரைவர், பஸ்சை ஓட்டி வந்த கண்டக்டர்: உயிர் பயத்தில் பயணிகள்

அரசு பஸ் டிரைவர் மதுபோதையில் தூங்கியதால், கண்டக்டர் தடுமாற்றத்துடன் ஓட்டிவந்தையடுத்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-23 01:33 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு தடம் எண் 212 அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு காஞ்சீபுரம் வந்தது. இந்த பஸ்சை டிரைவர் தரணேந்திரன் ஓட்டி வந்தார். பின்னர் சுமார் 11 மணியளவில் காஞ்சீபுரத்தில் இருந்து பஸ் புறப்பட தயாரானது. இதில் 46 பயணிகள் இருந்தனர். காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் கண்டக்டர் ஹோலிப்  அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கினார். பின்னர் அவரே பஸ்சை ஓட்ட தொடங்கினார். காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பஸ் பல்வேறு இடங்களில் தடுமாற்றமாக ஓட்டியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் டிரைவரை பார்த்தபோது, பஸ்சை ஓட்டி வருவது கண்டக்டர் என்பதும், டிரைவர் குடிபோதையில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி நகர பகுதிக்குள் பஸ் வந்தவுடன் பஸ்சை நிறுத்தக் கோரி பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர். இதனால் இரவு சுமார் 12 மணி அளவில் கண்டக்டர் பஸ்சை வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நிறுத்தினார். பயணிகள் இதற்கு மேல் பஸ்சில் பயணம் செய்ய முடியாது. வேறு பஸ்சில் செல்கிறோம் எனக்கூறி பஸ்சில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு பரபரப்பு உருவானது.

பயணிகள் வந்தவாசி  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு  வந்த வந்தவாசி போலீசார் யணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் வேறு அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் குடித்து விட்டு பஸ்சை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் கண்டக்டர் பஸ்சை ஓட்டி வந்துள்ளது தெரியவந்தது. அவர், விபத்தை ஏற்படுத்தி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும்.

இதுகுறித்து வந்தவாசி பணிமனை மேலாளர் ராமு குடிபோதையில் இருந்த டிரைவர் தரணேந்திரன் மீதும், அனுமதி இன்றி பஸ்சை ஓட்டிய கண்டக்டர் ஹோலிப்   மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்பேரில் விழுப்புரம் மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திண்டிவனம் பணிமனை மேலாளர் நாராயணமூர்த்தி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News