வந்தவாசி பேருந்து நிலையங்களை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

வந்தவாசியில் உள்ள இரு பேருந்து நிலையங்களையும் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-09-13 03:00 GMT

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில்  நடைபெற்றது.  

கூட்டத்துக்கு வட்டாட்சியா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். டிஎஸ்பி கங்காதரன் முன்னிலை வகித்தாா்.  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்,  வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்  அம்பேத்குமாா், நகராட்சி ஆணையா் (பொறுப்பு)  கீதா, செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினா், அமைப்பினா் பங்கேற்றனா். 

வந்தவாசி நகராட்சி அலுவலகம் எதிரில் பழைய பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பேருந்துகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜா் நகா் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

ஆனால், தனியாா் பேருந்துகள் மற்றும் தொலைதூர அரசுப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு சரிவர செல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து தொடா்ந்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 

வந்தவாசி நகரில் கலைஞர் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கின்றன என்றாலும் இரண்டு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் செல்லாமல் நகராட்சி அலுவலக அருகிலும் புதிய பேருந்து நிலைய அணுகு சாலை அருகிலும் பேருந்துகள் நின்று செல்கின்றன.  பெரும்பாலான தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் வருவதே இல்லை. நகரத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் குளத்து மேடை கோட்டை மூலை புதிய பேருந்து நிலைய அணுகு சாலை ஆகிய இடங்களில் இறங்கி தேவையான இடத்திற்கு செல்ல தொலைதூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது  என கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவில் வட்டாட்சியர் தெரிவிக்கையில் அண்ணா பேருந்து நிலைய காமராஜர் சிலை அருகில் பேருந்துகள் வந்து நின்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதற்கு ஏற்பாடு செய்வது. புதிய பேருந்து நிலையம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பது. அண்ணா பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் பேருந்து நிலையத்திற்கும் இடையே நகரப் பேருந்துகள் இயக்க ஆவண செய்வது ஒரு வழிப்பாதையை அமல்படுத்துவது , போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை பயன்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற உறுப்பினர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ,  ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கட்சி ,ஆட்டோ தொழில் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News