திருவண்ணாமலை அருகே சித்தேரி ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சித்தேரி ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் அஸ்தினாபுரம் நகர் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான சித்தேரி ஏரி உள்ளது. தற்போது நல்ல மழை பெய்துள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள இந்த ஏரியில் இருக்கும் நீரை விவசாயிகள் கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஏரி நீர் குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளும் தண்ணீர் குடித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஏறி அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.
அப்போது ஏரி நீரில் ஏராளமான மீன்கள். இறந்து மிதந்ததைப் பார்த்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரால், ஜிலேபி , கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன . இறந்த மீன்கள் சுமார் 300 கிலோ இருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சன்னியாசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேரில் வந்து பார்வையிட்டார். மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.