பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி, சேத்துப்பட்டில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
திருண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வந்தவாசி வட்டார செயலர் அ.அப்துல்காதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பினர்.இதில் இடைக்குழு உறுப்பினர் செ.மோகன், கிளை செயலர்கள் என்.ராதாகிருஷ்ணன், ரா.சேட்டு, பிற சங்க நிர்வாகிகள் பெ.அரிதாசு, ஆர்.ராமகிருஷ்ணன், கி.பால்ராஜ், கா.யாசர்அராபத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சேத்துப்பட்டில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். அதில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா அசேன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து மலர்மாலை அணிவித்த கியாஸ் சிலிண்டரை பாடை மீது வைத்து மேளம் தாளம் முழங்க, பட்டாசு வெடித்து சவ ஊர்வலத்தை போல் தோளில் சுமந்து வந்தனர். மேலும் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை மேலே தூக்கி வைத்து மாலை அணிவித்து ஊர்வலமாக வந்தனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை, வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் தசரதன், அன்பு, வட்டாரத் தலைவர் அன்புதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ஜாபர்அலி நன்றி கூறினார்.