பொதுமக்கள் வரி பாக்கியை செலுத்த வந்தவாசி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
வரி பாக்கி உள்ளவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என வந்தவாசி நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.;
அறிவிப்பு பலகையில் தங்களது பெயர் இடம்பெறாத வகையில் உடனடியாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை தொகையினை பல அறிவிப்பு கொடுத்தும் செலுத்தாமல் உள்ளவர் பெயர், முகவரியுடன் பஸ் நிலையம், சந்தை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது இடங்களில் அறிவிப்பு பலகையாக வைக்கப்பட உள்ளது.
நகராட்சிக்கு தற்போது ரூபாய் 5.24 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் நிலுவைத் தொகையை வரும் 31-ஆம் தேதிக்குள் நகராட்சி கணினி வசூல் மையத்தில் இணையதளம் மூலமாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகராட்சி வசூல் மையங்கள் செயல்படும் என்பதால் அனைவரும் நேரடியாக கட்டி தங்களது கணக்குகளை நேர் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தவறும் பட்சத்தில் அதிகமாக நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம் ,தொழில்வரி, குத்தகை பாக்கி ,செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதனை தவிர்க்கவும் கடைக்கு சீல் வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.