வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்வதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-19 10:58 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிர் மேம்பாட்டு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகம் முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை வசதி, குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

செய்யாறு அடுத்த கொருக்கை பகுதியில் அர்ஜுனன் காலனி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதே போல புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் முறையாக வருவதில்லை. இதுகுறித்து பலமுறை தலைவரிடமும், அதிகாரிகளும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கொருக்கை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து செய்யாறு போலீசார் மற்றும் கொருக்கை தலைவர் அருள் நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News