செய்யாறு, வந்தவாசியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்
செய்யாறு, வந்தவாசியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர்.;
திருவண்ணாமலையில் குருத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தூய வியாகுல அன்னை ஆலயத்திற்கு அருட்பணி பங்குத்தந்தை (பொறுப்பு) அந்தோணிராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஓசான்னா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்று தூய வியாகுல அன்னை ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
வந்தவாசி தூய இருதய ஆண்டவர் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயம் இணைந்து குறுத்தோலை ஞாயிறு முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயேசு கிறிஸ்து ஓசன்னா பாடல்களை பாடிக் கொண்டு குருத்தோலையை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இதே போல் வந்தவாசி கோட்டை காலனி சி எஸ் ஐ தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆரணி சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் சாலை, கோட்டை மூலை வழியாக சென்று தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சென்று முடிவடைந்தது. பின்னர் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் முன்னிலையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
சுங்க கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி நேற்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அவற்றில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் பைபாஸ் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சுங்க கட்டணம் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வந்தவாசியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் பஜார் வீதியில் சோதனை நடத்தினர். அப்போது சீதாராமஅய்யர் தெருவில் ஒரு மொத்த வியாபாரி கடையில் 210 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அந்த கடைக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் வந்தவாசி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்து 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் ஆகும்.
ஆய்வின்போது நகராட்சி மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.