வந்தவாசி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரிவியுங்கள் என்று திட்ட முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மையப்பட்டு, பாதிரி, வெண்குன்றம், மும்முனி, காரணை, கீழ்க்குவளைவேடு, தென்சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கான முகாம் வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்திலும், தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மழையூா், கோதண்டபுரம், பெருங்கடப்புத்தூா், சாத்தப்பூண்டி, தென்கரை, தென்னாத்தூா், திரக்கோயில் உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கான முகாம் மழையூரில் உள்ள சமுதாய கூடத்திலும் நடைபெற்றது.
முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் அரசின் முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை துறை வாரியாக பதிவு செய்து தீா்வு காணப்படுகிறது.
அரசின் 15 முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதனை துறை வாரியாக பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாமில் பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு பயன்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறைக்கு உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிப்பவர்களின் விவரம் நிச்சயம் காக்கப்படும் என்றும், குழந்தை திருமணங்கள் நடத்துவதால் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்தால் காவல்துறைக்கும், மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலகுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி மாணாக்கர்களின் சாதிச்சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் ஒருசேர அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் பெறப்பட்டு, அவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் முகாமில் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு சான்றிதழ்களை விரைந்து வழங்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளமான சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் அரசுடன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மழையூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மனு அளித்த நபர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 8 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையு ம் , 5 பயனாளிகளுக்கு கிராமப்புற வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்திற்கா ன ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் திட்டம் சார்பாக 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 51,50,000 மதிப்பீட்டில் தொழில் கடனுதவிக்கான ஆணைகளையும், மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 8 விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்கள்.
இம்முகாமில் செய்யார் சார் ஆட்சியர் செல்வி பல்லவி வர்மா, தெள்ளர் வட்டார வளர்ச்சி அலுவலர், வந்தவாசி வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.