கிணற்றுக்குள் பாய்ந்த கார்; விபத்தில் டிரைவர் பலி
தேசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் விவசாய கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. நீரில் முழ்கி டிரைவர் பலியானார்.
சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 34), கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்குமுன், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்திருந்தார்.
கோவில் வழிபாடு முடிந்து இன்று சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென கார் பழுதானது. இதனையடுத்து, மெக்கானிக்கை வரவழைத்து பழுதை சரிசெய்ய காரை அனுப்பி வைத்தார். பின்னர் சென்னைக்கு திரும்பிய அவர், காரை எடுப்பதற்காக நண்பர் ராஜேசுடன் (30) மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். பழுது சரி செய்யப்பட்ட காரில் மணிகண்டன் சென்னைக்கு புறப்பட்டார்.
தேசூர் வழியாக வரும்போது வளைவில் கார் திரும்பியது. அப்போது நிலைதடுமாறிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நிலத்துக்குள் இறங்கி விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். உடேன அவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.