வந்தவாசி அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 15 பக்தர்கள் படுகாயம்
வந்தவாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு அதிகாலையில் சென்று கொண்டிருந்தனர். பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்து நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.