கட்டுரை போட்டியில் சிறப்பிடம்: நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய அளவில் தனியார் அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மங்கலம் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் பல்வேறு தலைப்புகளில் கடந்த மாதம் போட்டி நடைபெற்றது. தேசிய அளவில் இணையதளம் மூலம் நடத்தப்பட்ட இந்த கட்டுரை போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் நிவேதிதா, ராஜகுமாரி ஆகியோர் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இவர்களது கல்வி கற்பித்தல் சம்பந்தமான ஆய்வு கட்டுரைகள் முதலிடத்தைப் பெற்றன. தேசிய அளவில் முதல் பரிசு பெற்ற இந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூங்காவனம் தலைமை வகித்தார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், ஸ்வார்டு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் நம்பிராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தீபா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.