அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து
வந்தவாசி அருகே அங்கன்வாடி மையத்தில் மேற்கூரையின் சிமெண்டு பெயர்ந்து விழுந்ததால் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், மருதாடு கிராமத்தில் உள்ள வழூர் சாலையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில் 20 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் இன்று காலை அங்கன்வாடி மையத்தில் வழக்கம் போல் குழந்தைகள் வந்து அமர்ந்திருந்தனர். அப்போது மேற்கூரையின் உட்புற சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து குழந்தைகளின் அருகில் விழுந்தது. இதனால் குழந்தைகள் அலறினர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள் அலறியடித்து கொண்டு அங்கன்வாடி மையத்துக்கு வந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மேற்கூரையின் உட்புற சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே குழந்தைகளின் மீது விழுந்திருந்தால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இதனால் அங்கன்வாடி மையத்துக்கு எங்கள் குழந்தைகளை அனுப்பவே அச்சமாக உள்ளது. எனவே சேதமடைந்த இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு வேறு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அங்கன்வாடி மையத்தின் அமைப்பாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் சமையலர் சமையலும் செய்து கொண்டு, குழந்தைகளையும் கவனித்துக் கொண்டும் உள்ளார். எனவே இந்த அங்கன்வாடி மையத்துக்கு உடனடியாக அமைப்பாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.