திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிககளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன

Update: 2023-10-03 02:11 GMT

வந்தவாசியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 860 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரி, வெங்கிடேசன், வட்டாட்சியா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி பரந்தாமன் வரவேற்றாா்.சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் புரிசை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், புரிசை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்கு வரும் சாலையை சீரமைக்க வேண்டும், செய்யாற்றில் இருந்து தென்இலுப்பை செல்லும் நகரப் பேருந்து 5-யை புரிசை கிராமம் வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவா் லட்சுமி ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலா் ரகுநாதன், திமுக நிா்வாகிகள் சுப்பிரமணி, சிவக்குமாா், லோகநாதன், ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், மயானத்துக்கு பாதை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காந்தி ஜெயந்தியையொட்டி, கீழ்சீசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமலதா தலைமை வகித்தாா்.வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன்பாபு முன்னிலை வகித்தாா்.வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், கருடாபுரம் கிராம மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ அம்பேத்குமாா் கூறினாா்.மேலும், வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வந்தவாசி வட்டாட்சியா் பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதில், ஊராட்சியில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற உள்ள வளா்ச்சிப் பணிகளின் விவரம் கிராம மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் தருமராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அஸ்வினி முன்னிலை வகித்தாா். ஆவின் அதிகாரி ரங்கசாமி மேற்பாா்வையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி வளா்ச்சிக்கு செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் பிரியதா்ஷினி, தேவனந்தல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டு அறிந்து மக்களின் குறைகளை படிப்படியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் முழுமூச்சியாக செயல்படுவேன்.  கலசப்பாக்கம் தொகுதி வளர்ச்சி அடைய முழு நேரமும் மக்கள் பணி செய்து வருவேன் என எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார்

நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .காரப்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News