சீட்டு பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய சீட்டு பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய சீட்டு பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தனியாா் நிதி நிறுவனத்தில் செலுத்திய சீட்டு பணத்தை மீட்டுத் தரக் கோரி, சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வந்தவாசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு வி ஆர் எஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல் பட்டு வந்தது . தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி மாத சீட்டு பிடிக்கப்பட்டு வந்தது. மாத தவணையாக ரூபாய் 300 முதல் 5 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூபாய் 3000 செலுத்துபவர்களுக்கு பத்தாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களும், பட்டாசும் ,இனிப்புகளும் வழங்கப்படும் என்றும், ரூபாய் 60,000 செலுத்துபவர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், பட்டாசு, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர் . ஆனால் கடந்த ஆண்டு நிதி நிறுவனம் கூறியபடி பொருட்களை வழங்கவில்லை .
இதனால் பணம் கட்டியவர்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதாரம் குற்ற பிரிவு போலீசில் புகார் செய்திருந்தனர் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்யாற்றில் ஒரு இடத்திலும், வந்தவாசியில் இரண்டு இடங்களிலும் இயங்கி வந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சமஸ் மொய்தீன் தலைமறைவானார் . அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வி.ஆர்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் பறி கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கையில் திருவோடு ஏந்தியும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுது புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணத்தை மீட்க பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகேசன், வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.