வந்தவாசி அருகே அங்கன்வாடி மையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.;
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த மையத்தில் படிக்கும் குழந்தைகளிடம், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்துக் கேட்டறிந்தார். அப்போது குழந்தைகள் பாடிய பாடல்களை கேட்ட அவர், குழந்தைகள் அனைவருக்கும் சாக்லேட்டுகளை வழங்கினார். அந்த மையத்தில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, இருப்பு மற்றும் வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகரன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் மரியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் மேலும் பல்வேறு அங்கன்வாடி மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புன்னை, ஓசூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை கூடுதல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.