கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்
வந்தவாசியில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒருசில கடைகளில், அதன் உரிமையாளர்கள் அதிக மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். அதேபோல் அதிக மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த ஒரு செல்போன் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆய்வின்போது நகராட்சி அலுவலர் சிவா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.