மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவா் 6 மாதங்களுக்கு பின்னர் கைது
வந்தவாசி அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை 6 மாதத்துக்கு பின்னர் போலீசார் கைது செய்யதுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மனைவியைக் கொன்று விட்டு மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தாா்.
இதனை பார்த்த பொதுமக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வந்தவாசி டிஎஸ்பி காா்த்திக் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
நீண்ட நாட்கள் ஆகியும் பெண்ணின் உறவினர்கள் யாரும் வராத காரணத்தால் காவல்துறையினர் பெண்ணின் புகைப்படத்தை வந்தவாசி, சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டியாக ஒட்டி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி நித்தியா என்பவரை ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 13-ந் தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் மயிலாடுதுறை போலீஸாா் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்துக்கு நித்தியாவின் புகைப்படம் வந்தது. அந்த புகைப்படமும் வெண்குன்றம் தவளகிரி மலைக்கோவிலில் படிக்கட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நித்தியாவின் சொந்த ஊர் வந்தவாசி என்றும், அவரது தாய் சாந்தி என்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசி மூலம் ஜெயராமனுடன் பேசினார். அப்போது அவர் வந்தவாசிக்கு வர வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து ஜெயராமன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பஸ்சில் இறங்கும்போது போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையில் நித்யாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.
ஜெயராமன் சீர்காழியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும். நித்யா கணவரிடம் சொல்லாமல் அடிக்கடி வந்தவாசிக்கு சென்று விடுவாராம். பின்னா், ஜெயராமன் சென்று அழைத்து வருவாராம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி வந்தவாசிக்கு நித்யா வந்தாா். ஜெயராமன் ஏப்ரல் 17-ஆம் தேதி வந்தவாசிக்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக்குச் சென்றாா்.
அங்கு தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்படவே, நித்யாவின் கழுத்தை ஜெயராமன் நெரித்ததில் அவா் உயிரிழந்தாா். பின்னா், அவா் சீா்காழிக்குச் சென்றுவிட்டாா். பின்னர் மனைவியை காணவில்லை என்று சீர்காழி போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டு 6 மாதம் கழித்து ஜெயராமனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.