செய்யாறு அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
செய்யாறு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் குருகார்த்தி, இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஞானமுருகன் பூண்டியில் உள்ள தனது உறவினர்களை ஐயப்ப சாமி பூஜைக்காக வேலூருக்கு காரில் அழைத்துச் சென்றார். அப்போது செய்யாறு- ஆரணி சாலை வழியாக சென்றபோது பெரும்பள்ளம் கிராமம் தனியார் பள்ளி எதிரில் திடீரென காரின் முன் பக்கத்தில் புகை வருவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காரை நிறுத்தினார்கள்.
உடனே காரை ஓட்டிய குரு கார்த்தி இறங்கி பார்த்தபோது முன்பக்கத்தில் அதிக அளவு புகை வந்தது. உடனடியாக காரில் இருந்த உறவினர் பெண்களை கீழே இறக்கினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செய்யாறு தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
செய்யாறு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீ பிடித்துஎரிந்தது.
பின்னர் கார் எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 பெண்கள் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பைக் தீப்பிடித்து எரிந்து சேதம்
வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தைச் சேர்ந்தவா் மணிகண்டன் , இவா், இன்று காலை இறைச்சி வாங்குவதற்காக தனது பைக்கில் வந்தவாசி காதா்ஜண்டா தெருவுக்குச் சென்றாா். இறைச்சிக் கடை முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று அவா் இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, மணிகண்டனின் பைக் திடீரென தீப்பிடித்து, மளமளவென வாகனம் முழுவதும் பரவி தீ எரியத் தொடங்கியது. அங்கிருந்தோா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இருப்பினும், பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.