பைக்கில் சென்ற இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர் கைது
தூசி அருகே வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வெம்பாக்கத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி மாங்கால் கூட் ரோட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இளம்பெண் கடந்த 20-ந் தேதி மாலை பணி முடித்து தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் வெம்பாக்கத்தில் உள்ள பெண் காப்பக விடுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது சித்தாத்தூர் நமண்டி ஏரிக்கரை அருகே ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். நண்பருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மடக்கி அவர்களை வாலிபர்கள் தாக்கியுள்ளனர். மேலும் இளம் பெண்ணுடன் வந்த வாலிபரை கயிற்றால் கட்டி போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டிச் சென்ற வாலிபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
சுதாரித்துக் கொண்ட இளம் பெண் வாலிபர்களிடம் இருந்து ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றார். இது பற்றி பொதுமக்களிடம் இளம்பெண் கூறினார். சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் கட்டிப் போட்டிருந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர். இது குறித்து இளம் பெண் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது திருவடிராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ரஞ்சித் குமார் , விக்னேஷ் ஆகிய 3 பேர் என தெரியவந்தது. போலீசார் அவர்கள் மூன்று பேரையும் இன்று கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு
வந்தவாசி நல்லூரை சேர்ந்தவர் வரதன் மாற்றுத்திறனாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக வெம்பாக்கம் அடுத்த மாமண்டூரில் தங்கி உள்ளார்.
இன்று காலை இயற்கை உபாதை கழித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் வரதனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம கும்பல் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வரதனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முன்விரோதம் காரணமாக வரதனை கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.