வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி 2 உழவு காளை மாடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உழவு பணியின்போது மின்சாரம் தாக்கி இரண்டு உழவு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2023-10-03 11:06 GMT

வந்தவாசி அருகே உழவு பணியின்போது மின்சாரம் தாக்கி இரண்டு உழவு மாடுகள் உயிரிழந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் நிமிர்ந்த கார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு வந்தவாசி அருகே பாதிரி கிராமத்தில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு இரண்டு உழவு மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார்.

உழவு பணிக்காக வயலில் தண்ணீர் பாய்ச்சி சேறாக மாற்றப்பட்டிருந்தது.

சேற்று வயலில் கலப்பையை பிடித்தவாறு மாடுகளை சின்ன பையன் ,உழவு மாடுகளை ஓட்டி சென்று கொண்டிருந்தார் . வயலில் உள்ள மின்கம்பத்தின் அருகே ஏர் உழுதவாறு மாடுகளை ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார கம்பத்தில் இருந்து திடீரென மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் இரண்டு மாடுகளும் அந்த இடத்திலேயே உயிரிழந்தன. மாடுகளை ஓட்டிச் சென்ற சின்னப் பையன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இரண்டு மாடுகளும் தன் கண்ணெதிரிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை பார்த்த சின்னப்பையன் கதறினார்.

அப்பகுதி பொதுமக்கள் வந்தவாசி மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்தவாசி உட்கோட்டமின் பொறியாளர்கள் மற்றும் வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான இரண்டு உழவு காளை மாடுகள் உயிரிழந்ததால் மாடுகளை வைத்து கூலி வேலை செய்யும் சின்ன பையனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது , எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னப் பையனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் ,அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குகோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News