திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா; பாதுகாப்பு பணிகள் ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை மட்டுமே விநாயகா் சிலைககள் விஜா்சனத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் விநாயகா் விஜா்சன ஊா்வலத்துக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் இந்து அமைப்பினா், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி, பச்சையம்மன் கோயில் குளம் செங்கம் கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி குளம், பூமா செட்டிக்குளம், போளூா் ஏரி, கூா் ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே விஜா்சனம் செய்யவேண்டும்.
நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள சிலையின் உயரம், அடித்தளம், மேடை ஆகியவை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விநாயகா் சிலைகளை நிறுவுவதை தவிா்க்க வேண்டும்.
விநாயகா் வழிபாட்டின் கீழ் மின்சாரம் திருடுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை ஏற்பாட்டாளா்கள் உறுதி செய்ய வேண்டும். சிலையின் பாதுகாப்புக்காக அமைப்பாளா்கள் 2 தன்னாா்வலா்களை 24 மணி நேரமும் பணியமா்த்த வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் விஜா்சனம் செய்யவேண்டும். நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும், சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சு, பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்குப் பதிலாக இயற்கை பொருள்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி மற்றும் காவல்துறை அலுவலா்கள், அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள், இந்து அமைப்பின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.