திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகள்தோறும் திமுக கொடி ஏற்ற அமைச்சர் வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகள்தோறும் திமுக கொடியினை ஏற்ற அமைச்சர் வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவின் பவள விழாவினையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பவள விழாவினை முன்னிட்டு, வீதிகள்-வீடுகள் தோறும் கழகக்கொடியினை ஏற்ற என கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனையடுத்து திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு விடுத்துள்ள அறிக்கையில்,
தந்தைப்பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில், சட்டங்களாகவும், திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றி, இந்த 2024ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினை கொண்டாடுகிறது.
பவள விழாவினையொட்டி திமுக கொடி கம்பங்கள் அனைத்தும் புதுபிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக்கொடியை ஏற்றி, பட்டொளி வீசி, பறந்திட செய்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, வீதிகள் தோறும் பறக்கும் இரு வண்ணக்கொடி, நம் வீடுகள் தோறும் பறந்திட வேண்டும். கழகக் கொடி பறக்காத வீடுகளே இல்லை என்னும் வகையில் பவள விழாவை முன்னிட்டு, நம் இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடியேற்றி கொண்டாடிடுவோம் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
எனவே திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழகத்தின் பவள விழாவினை மாவட்டம் முழுவதும் கழகக் கொடியினை ஒவ்வொரு கிளைக் கழகங்களிலும், கழகத் தோழர் இல்லங்களிலும், கழக அலுவலகங்கள், வணிக வளாகங்களில் ஏற்றிவைத்து எழுச்சியாக கொண்டாடிட கேட்டுக் கொள்கிறேன் என வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.