அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர் அருள் பாலித்தார்;
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை மூலவர் சம்பந்த விநாயகருக்கு பால் பழம் பன்னீர் தயிர் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தங்க கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்க சம்பந்த விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாரதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உற்சவர் விநாயகர் கோயில் மாட வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை அலங்காரிப்பதற்காக சிறிய வண்ண அலங்கார குடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.