திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1008 கலச பூஜை

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

Update: 2023-05-28 00:52 GMT

1008 கலச பூஜை

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

அக்னி நட்சத்திர வெயில் கடந்த4-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதிஅண்ணாமலையார் கோயில்,திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் திருவண்ணாமலை பெரியாண்டவர் கோயில், மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் உட்பட மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் தொடங்கியது. பல்வேறு மூலிகைகள் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட தாரா பாத்திரத்தில் இருந்து மூலவரை குளிர்விக்கும் வகையில், அவர் மீது நீர்த்துளிகள் விழும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கோடை மழை குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்டியது. இதனால் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் 104 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் சாலைகளில் கானல்நீர் தோன்றியது. மேலும் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி தோஷ நிவர்த்திபரிகால பூஜை, நேற்று காலை 27 -ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் இரவு 8 மணி அளவில் 1,008 கலச பூஜை ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால 1,008 கலச பூஜையும், தீபாராதனையும், மாலையில் 3-ம் கால 1,008 கலச பூஜையும் நடக்கிறது. இதனையடுத்து நாளை காலை 7 மணிக்கு 4-ம் கால 1,008 கலச பூஜை, 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 11 மணிக்கு 1,008 கலசாபிஷேகம் மற்றும் இரவில் சாமி திருவீதி உலா நடக்கிறது.

நிவர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரசேன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News