அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில் 65 மெட்ரிக் டன் மகசூல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், 65 மெட்ரிக் டன் நெல்லை தை முதல் வாரத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது

Update: 2021-12-22 07:25 GMT

மாதிரி படம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், 32 ஏக்கர் பரப்பளவில் உயர்ரக பொன்னி நெல் விளைச்சல் விரைவில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. கனமழை பாதிப்பையும் கடந்து கூடுதல் மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு  சொந்தமான விளை நிலங்கள், கட்டிடங்கள் ஆகியவை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அவை அனைத்தும், அறநிலையத்துறையின் நிர்வாகத்துக்கு உட்பட்டு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை அருகே, நாயுடுமங்கலம் பகுதி தனகோட்டிபுரம் கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அதில், ஆண்டுதோறும் பராம்பரிய பொன்னி நெல் சாகுபடியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே நேரடியாக மேற்கொள்கிறது.

இங்குள்ள விளைநிலங்களுக்கு நீர்பாசன வசதிக்காக கோயிலுக்கு சொந்தமாக தனியாக ஒரு ஏரியும், பம்புசெட் வசதியுடன் கூடிய பிரமாண்டமான 3 திறந்தவெளி கிணறுகளும் உள்ளன. அதனால், ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் சாகுபடி தடையின்றி நடக்கிறது. மேலும், சாகுபடி பணியை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்டோர் அடிக்கடி நேரில் ஆய்வு செய்கின்றனர். அதற்கென தனியாக ஊழியர்களை நியமித்து பராமரிக்கின்றனர்.

இந்நிலையில், நடப்பு சம்பா பயிர் பருவத்தில், 32 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தில் உயர்ரக பொன்னிநெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம், ஆண்டு குத்தகை அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விளைநிலங்களிலும் தற்போது செழிப்பான சாகுபடி நடந்திருக்கிறது.

இது குறித்து  அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கூறுகையில்,   நேரடியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள 32 ஏக்கரிலும் நாட்டு பொன்னி நெல் விளைச்சல் கதிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. தை முதல் வாரத்தில் அறுவடை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த மாதத்தில் தொடர் கனமழை பெய்தது. அதனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த நெற் பயிர் சேதமடைந்தது. ஆனாலும், கனமழை வெள்ள பாதிப்பையும் கடந்து, அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களில் நெல் சாகுபடி அமோகமாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சராசரியாக ஏக்கருக்கு 22 முதல் 25 மூட்டை நெல் விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேளாண்துறையின் ஆலோசனைப்படி செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்தமுறை அதிகபட்சம் 65 மெட்ரிக் டன் வரை நெல் விளைச்சல் கோயில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. என  தெரிவித்தனர்.

ஒவ்வொரு வருடமும்  தை மாதம் ரதசப்தமி அன்று அண்ணாமலையார் கலசபாக்கம்  ஆற்றில் தீர்த்தவாரிக்கு  செல்வது வழக்கம்.

தீர்த்தவாரி முடிந்தவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும்போது தனக்கு சொந்தமான தனகோட்டிபுரம்  சென்று தனது நிலங்களை பார்வையிட்டு வருவது இன்றும் வழக்கமாக உள்ளது. அப்போது ஊர்மக்கள் விளைந்த நெல் மணிகளை அண்ணாமலையாருக்கு காணிக்கையாக செலுத்துவர்.

Tags:    

Similar News