வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் தீயில் கருகி உயிரிழப்பு
கலசபாக்கம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.;

தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த தேவகி
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தலை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் அக்காள், தங்கைகளான தேவகி மற்றும் இந்திராகாந்தி ஆகிய இருவரையும் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி தேவகிக்கு குழந்தைகள் இல்லை.
அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தேவகி அவர் திடீரென கூச்சல் போட்டுள்ளார். உடனே அவரது தங்கை இந்திராகாந்தி மற்றும் குடும்பத்தினர் ஓடிச்சென்று அவர் தூங்கிக் கொண்டிருந்த அறையில் பார்த்தபோது தேவகியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பார்த்தபோது தேவகியின் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்திருப்பது தெரியவந்தது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.