கலசப்பாக்கம் அருகே விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்..!

கலசப்பாக்கம் அருகே விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2024-06-25 11:37 GMT

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாம் 

கலசப்பாக்கம் அருகே குப்பம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டவேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம் கீழ்குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

கலசபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் கோடை உழவு செய்தல், பசுந்தாள் உர பயிர் சாகுபடி மூலம் மண்வளம் பெருக செய்தல், பயிர் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் பழனி வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

வாழவச்சனூர் வேளாண்மைகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் அருண்குமார் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல், நுண்ணுட்ட உரங்கள் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல், இரசாயன உரங்களின் அளவை குறைத்து அங்க உரங்களை பயன்படுத்தி மண் வளத்தைபாதுகாத்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வைதீஸ்வரன் மண்மாதிரி எடுத்தல், மண் பரிசோதனை அடிப்படையில் உரம் மேலாண்மை செய்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் முருகன் கலந்து கொண்டு விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை கேட்டு பயிர் சாகுபடி செய்து அதிக வருமானம் பெறுமாறு கேட்டுக் கொண்டார். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாட்டினை தோட்டக்கலை உதவி அலுவலர் ஆனந்தன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டியன், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் அன்பரசு, சிவசங்கரி ஆகியோர் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News