ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலையில் பலத்த மழையின் காரணமாக பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கதடை விதித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய் து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர், அதோடு மட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம், ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் கலசபாக்கம் அடுத்த ஜவ்வாதுமலைப்பகுதியில் உள்ள ஜமுனாமரத்தூர், அத்திப்பட்டு, கோவிலூர், பட்டறைகாடு, தும்பரெட்டி, ஆண்டியப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், மலைவாழ் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயற்கை எழிலும் அடர்ந்த வனப்பகுதியும் கொண்ட ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் நேற்று கன மழை பெய்ததால் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளப்பெருக்கால் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கலசபாக்கம் அருகே தொடர் மழையால் நிரம்பி வரும் மிருகண்டா அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 255 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையால் மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 255 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா மிருகண்டாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் மொத்த உயரம் 22.97 அடியாகும் அணையின் மொத்த கொள்ளளவு 87 ஆயிரம் மில்லியன் கன அடி ஆகும். திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மிருகண்டா நதியிலிருந்து மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 255 அடியாக உள்ளதால் அணையின் உயரம் தற்போது 20 அடியை எட்டியுள்ள நிலையில் அணையின் இரண்டு மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மிருகண்டா நதியை ஒட்டிய காந்தப்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றாள், கெங்கலமகாதேவி, சிறுவள்ளூர், வில்வாரணி, எலத்தூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு நீர்ப்பாசன துறை அதிகாரிகளால் வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.