திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

Crime News in Tamil -முன்விரோத தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-26 07:04 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

Crime News in Tamil -கோஷ்டிமோதல்; சாலை மறியலால் பரபரப்பு

கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவின்போது காளை விடும் விழா நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில், சிலர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இருதரப்பினருக்கு இடையே, அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம்  தீபாவளி பண்டிகையின்போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் பைக்கில் வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்த சிலர், காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி ஸ்டீபன், போளூர் டி.எஸ்.பி குமார் மற்றும் கடலாடி போலீசார், ஆயுதப்படை போலீசார் அந்த இடத்திற்கு நேரில் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பட்டாசு வெடிப்பு; ரேஷன்கடையில் அரிசி, கோதுமை மூட்டைகள் சாம்பல்

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன்கடை அருகாமையில், சிறுவர்கள் சிலர் தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்துள்ளனர். அந்த பட்டாசுகள் பூட்டி கிடந்த ரேஷன் கடை இருப்பு அறையில் விழுந்து, வெடித்து சிதறியதில் அரிசி, கோதுமை மூட்டைகளில் தீப்பிடித்து உள்ளதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து, கடையிலிருந்து கரும்புகை வெளிவரவே, அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ரேஷன் கடை ஊழியர் சரவணனுக்கு தகவல் அளித்தனர். அவர் கடையில் வந்து திறந்து பார்க்கும் போது அங்கிருந்த அரிசி, கோதுமை மூட்டைகள் கோணிப்பை எரிந்த நிலையில் காணப்பட்டது. பின்னர் தீ மேலும் பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிசை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

செய்யாறு வட்டம், வெம்பாக்கம் மோரணம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமமூர்த்தி . இவரது மனைவி வாழை அம்மாள். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். இரவு வழக்கம் போல் அனைவரும் உணவு அருந்திவிட்டு, கூரை வீட்டில் படுத்து தூங்கினர்.

இந்நிலையில் அதிகாலை குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் குடிசை தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.  வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News