பருவதமலை கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கலசபாக்கம் அருகே பருவதமலையில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
பருவதமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரம்மராம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சன்னதி முன்பு பக்தர்களின் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை அடிக்கடி மர்மநபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விடுகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
தற்போது உடைக்கப்பட்டு உள்ள உண்டியல் வெளியில் தெரியாமல் இருக்க காடா துணி மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருட்டு போயுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இரவுநேர காவலர் பணிக்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.