பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பாலம் அமைக்கும் பணி தீவிரம்
வெள்ளப் பெருக்கில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து பாலம் அமைக்கும் பணி தீவிரம்
கலசப்பாக்கம் அருகே தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் சேதம் அடைந்தது . இதனால் தற்காலிக பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலசப்பாக்கம் பகுதியில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியிலுள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தற்காலிக பாலம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தற்காலிக பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வந்தது.
தொடர் மழை காரணமாகவும், தரச்சான்று பெற்ற பின்பு தற்காலிக பாலம் தொடங்குவதற்கு முடிவு செய்தாலும் பாலம் வேலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல்லறிந்த கலசபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், கடலாடி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு இரும்புத் தூண்கள் பொருத்தப்பட்டு தற்காலிக பாலம் அமைக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.