நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் பர்வதமலைக்கு சோலார் மின் விளக்குகள்
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பர்வதமலைக்கு 40 சோலார் மின் விளக்குகளை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.;
மலைப்பாதையை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரான அண்ணாதுரை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தாலுக்காவில் பர்வதமலை அமைந்துள்ளது. ஜவ்வாதுமலையின் ஒரு பகுதி இது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் உயரம் 2668 அடி உயரம். அதைவிட சுமார் 2 ஆயிரம் அடி கூடுதல் உயரமானது பர்வதமலை. 4560 அடி உயரம் உள்ள பர்வதமலை உச்சிக்கு செல்வது என்பது சிரமமானது.
மலை உச்சிக்கு 700 மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடம், ஒருபாறையின் செங்குத்தான வழிப்பாதை. பாறையில் 5 அடிக்கு ஒரு கடப்பாரை வைக்கப்பட்டுள்ளது. அதனை பிடித்துக்கொண்டுதான் மேலே ஏற முடியும். இந்த இடம் பக்தர்கள் 90 சதவிதம் பேரை பயம் கொள்ள வைக்கிறது என்பதால் இரவு பயணத்தை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். பலயிடங்களில் சறுக்கினால் மரணம் என்கிற வகையில் உள்ளது பாதை. அப்படிப்பட்ட மலைக்கு நூற்றுக்கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த அண்ணாதுரையிடம், பர்வதமலை பகுதியை மேம்படுத்தி தர வேண்டும், மலை உச்சியில் கோவிலுக்கு மின் விளக்கு அமைத்து தரவேண்டும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி மக்கள் வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சிலருடன் 4560 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு ஏறி சென்று அங்குள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில், மௌனம்யோகி விடோபானந்தா ஆசிரமத்துக்கு 40 சோலார் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்து மலை மேலே செய்யவேண்டியது இன்னும் என்னவுள்ளது என நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சோலார் மின் விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.