மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்கத்திற்கான விழா நடைபெறும் இடம் தேர்வு
கலசப்பாக்கம் அருகே மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவக்கத்திற்கான விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,627 ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று பயன்பெறும் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், 6 லட்சத்து 42 ஆயிரத்து 462 பேர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளித்தனர். அதைத்தொடர்ந்து, விண்ணப்பங்களில் தெரிவித்திருக்கும் விபரங்கள் சரியானதா என உறுதி செய்வதற்காக, வீடு வீடாக சென்று களத்தணிக்கை செய்யப்பட்டது. அதன்படி, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைப்படி, தகுதியானதாக கண்டறியப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளின் உடைய பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்மந்தப்பட்ட நபர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம், விண்ணப்பம் ஏற்கப்பட்டது என தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள வங்கி சேமிப்பு கணக்கு விபரங்கள் சரியானதா, தற்போது பயன்பாட்டில் வங்கி கணக்கு உள்ளதா, உரிமைத்தொகையை வங்கியில் செலுத்தினால் உரிய நபருக்கு சென்றடையுமா என்பதை சரி பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் 15ஆம் தேதி போளூர் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். எனவே, விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இருந்தும் சுமார் 6000 மகளிர்கள் நிகழ்ச்சிக்கு வர உள்ளனர் . திருவண்ணாமலை முதல் வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு இருக்கும் என்பதால் வசூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளோம்.
அடுத்த வாரம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் இரண்டு இடங்களையும் பார்வையிட்டு அதில் எந்த இடத்தில் விழா நடத்தலாம் என்று அறிவித்த பின்பு பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
மேலும் பெரிய அளவு மழை வந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாத அளவிற்கு எப்படி சமாளிப்பது என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இடம் தேர்வு செய்யும் பணியை முதற்கட்டமாக தொடங்கியுள்ளோம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறினார்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் அன்பழகன், யூனியன் சேர்மன் சாந்தி பெருமாள் ,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன் ,தாசில்தார் பாபு ,மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வட்ட வளர்ச்சி அலுவலர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.