சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண உதவி

கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் வழங்கினார்.;

Update: 2022-01-25 07:05 GMT

சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினர் நிவாரண உதவிகளை  கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட வீரளூர் கிராமத்தில் கடந்த வாரம் சுடுகாட்டு பாதை பிரச்சினை காரணமாக வன்முறை ஏற்பட்டது. இதில் அருந்ததியின மக்கள் வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன. 

தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் முன்னிலையில் சமரச கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வீரளூர் கிராமத்தை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கலெக்டர் முருகேஷ், சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நிவாரண உதவிகளை வாங்க யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்

அதைத்தொடர்ந்து,  இன்று கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட 41 அருந்ததியின குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பார்த்திபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News