பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி போன்றவை உள்ளன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில தினங்களாக ஜமுனாமரத்தூர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களில் ஜமுனாமரத்தூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் அதிகளவில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் வனத்துறையினர் பீமன் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் பார்வையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் தெரிவித்துள்ளார்.