திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்;
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தது. அதுவும் இப்பொழுது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் 108 டிகிரியை தாண்டி இருந்தது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை. கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது.
கடந்த வாரம் கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, வந்தவாசி, போளூர், கண்ணமங்கலம், ஜவ்வாது மலை பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குலம் குட்டைகள் தாழ்வான பகுதிகளின் நீர் தேங்கியது. பலத்த மழை பெய்ததால் ஜமுனாமரத்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜமுனாமரத்தூரில் இரவு 118 மி.மீ. மழை பதிவானது.
அதேபோல் திருவண்ணாமலை வேங்கி கால், அடிஅண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முப்பது நிமிடங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது.
ஆரணி அருகே கொட்டி தீர்த்த கனமழை
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல், களம்பூர், முள்ளண்டிரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. அக்னி வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.