அதிகாரிகள் அலட்சியம்.. விவசாயிகள் கோபம்.. குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமையன்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் நிர்வாக வேலை காரணமாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 3-வது வார செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை, இதுவரை சுமார் 10 கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. ஆனால் எந்த கூட்டத்திலும் சரியான முறையில் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை, இது அலுவலர்கள் தவறா, இல்லை அலுவலர்களின் அலட்சியமா ? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கோடை மழையில் நனைந்து நெற்யிர்கள் முளை விட்டது என விவசாயிகள் கண்ணீர் மல்க மனு கொடுத்ததோடு ஏதேனும் ஒரு கிராமத்தில் பார்வையிட வேண்டும் என ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி குறைதீர்வு கூட்டம் முடிந்த பிறகு பில்லூர் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நெல் வயலை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் பார்வையிட்டார். அப்போது நடவு செலவு குறித்து கேட்டறிந்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் காண்பித்தனர் . இந்த பயிர்களை எப்படி நாங்கள் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றோம். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆரணி:
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேளாண் விரிவாக்க உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆரணி தாசில்தார் பெருமாள் தலைமையில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் திருமலை வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருவதால் சரிவர விவசாயம் செய்ய முடியவில்லை, மின் நிறுத்தம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா முகாம்கள் நடத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாக்கள் மாற்றம் செய்வதில் தாமதம் இருந்து வருகிறது. அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.