வீரலூர் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கலசப்பாக்கம் அருகே வீரலூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு;
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அந்த மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் பயன்படுத்திவந்த மயான பாதை சரியில்லாத காரணத்தால் அங்குள்ள மெயின் ரோடு வழியாக சடலங்களை எடுத்துச் செல்ல அதிகாரிகள் உத்தரவு வழங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு இறப்பு ஏற்பட்ட போது அப்பகுதி மக்கள் மெயின்ரோடு வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக வீரலூர் கிராமத்தில் பதற்றம் அதிகரித்து வந்தது. முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள், மக்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் வீடுகளைத் தாக்கி வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்என்று முறையிட்டனர்.
அதனைக் கேட்ட மாநில மனித உரிமை ஆணையர், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி தரப்படும் என்றும், பாதிக்கபட்டவர்களுக்கு சரியான சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வீரலூர் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இப்படியான சூழலில், தாக்குதலை தடுக்க தவறியதாக காவல், வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கும் பதியப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.