பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த எம்பி வலியுறுத்தல்
கலசப்பாக்கம் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்
கலசபாக்கம் தாலுகாவில் 37 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கலசப்பாக்கம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிராண்டா அணையில் தற்போது 19.35 அடி தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு , காலூர் , ஆணை வாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் . அதேபோல் நெசவு கூடங்களில் தண்ணீர் தேங்குவதால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஆர்டிஓ கவிதா , தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஏரி மதகுகள் உடைந்தால் மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், . ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.