ஒரு கோடி மதிப்பில் புதிய கட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒரு கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.;

Update: 2024-01-14 03:11 GMT

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டிடங்களையும் ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒரு கோடி மதிப்பில் கட்டிடங்களையும் ஆயிரம் பெண்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

இந்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, பட்டா மாறுதல் கூட்டு பட்டா மாறுதல், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி, தொடங்க தனி நபர் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஊனமுற்றோருக்கான சக்கர நாற்காலி , விலையில்லா தையல் இயந்திரம், விவசாய இடுப்பொருள் அளித்தல் என ஆயிரம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளையும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் ரேணுகாம்பாள் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், ஊராட்சி பள்ளி அருகில் சிமெண்ட் கான்கிரீட் பிளாட்பாரம் மற்றும் தரைப்பாலம் அமைத்தல், பெரிய ஏரி ஓடையில் சிறு பாலம் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சி பணிகள் இப்பொழுது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி வந்தாலே முழுக்க முழுக்க மக்களின் ஆட்சியாகவும், குறிப்பாக பெண்களின் ஆட்சியாகவும் திகழ்ந்து வருகிறது. ஏனென்றால் ஆண்களுக்கு பெண்கள் சமம், ஆண்களை விட பெண்கள் அனைத்திலும் திறமை வாய்ந்தவர்கள் அதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும், பெண்கள் படிப்பிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும், பெண்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பெண்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு உயர் கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் வேலு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரண்யா தேவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News