தம்பியை கொலை செய்து கழிவுவுநீர் தொட்டியில் புதைத்த அண்ணன் கைது
கலசபாக்கம் அருகே சொத்து பிரச்சினையில் இரும்பு கம்பியால் அடித்து தம்பியை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் புதைத்த அண்ணனை கைது செய்த காவல்துறை;
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தைச் சர்ந்த சின்னகிருஷ்ணன். அவரது மகன்கள் ஏழுமலை (48), திருமலை (45) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்
இவர்கள் கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுவான வீட்டை இரண்டாக பிரித்து இருவரும் தனித்தனி வாசல் ஏற்படுத்தி வசித்து வந்தனர். ஏழுமலைக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து பெரிய ஏரி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
திருமலைக்கு திருமணம் ஆகாததால் அவர் தனியாக வசித்து வந்தார். அவரிடம் பொது வீட்டை விற்க வேண்டும். எனவே வீட்டை விற்றுத் தருமாறு ஏழுமலையிடம், திருமலை அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மது போதையில் வந்த திருமலை, அண்ணன் ஏழுமலையிடம் வீட்டை விற்க மனைப் பத்திரத்தை கேட்டு தகராறு செய்துள்ளாா். இதில், இருவரும் ஒருவரை ஒருவா் கைகளால் தாக்கிக் கொண்டனராம்.
அப்போது, ஏழுமலை இரும்புக் கம்பியால் திருமலையின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் திருமலை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இறந்த அவரை வீட்டு தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிக்கு இழுத்துச் சென்றார். அங்கு தொட்டிக்குள் திருமலையை தள்ளிவிட்டு மண்ணை கொட்டி மூடிய ஏழுமலை தலைமறைவாகி விட்டார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் நடந்த சண்டை குறித்து விசாரிப்பதற்காக அவர்களது வீட்டிற்கு வந்தனர்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பார்த்தனர். இருவருக்கும் இடையே நடந்த தகராறு குறித்து உடனடியாக கடலாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விரைந்து திருமலையின் உடலை மீட்டு வெளியே எடுத்து விசாரணை நடத்தினர்.
திருமலையின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தலைமறைவான ஏழுமலையை தேடி கண்டுபிடித்தபோது நடந்த சம்பவத்தை கூறி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து எழுமலையை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.