துணை ராணுவ வீரரின் மகனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

கலசபாக்கம் அருகே துணை ராணுவ வீரரின் மகனை கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை அளித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

Update: 2022-07-13 11:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் வினோத் என்ற வினோத்குமார் (வயது 12) கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அது குறித்து கலசபாக்கம் போலீசில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் செல்போனில்தொடர்பு கொண்ட மர்மநபர்கள், வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவன் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சாந்தி என்ற பெண் தான் வினோத்குமாரை அழைத்து வர சொன்னதாக அவர் கூறினார்.

பின்னர் சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்ததும் போலீசில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அச்சிறுவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சாந்தியையும், சம்பந்தப்பட்ட மாணவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் நண்பர்களான சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் வினோத்குமார் கொலை சம்பவத்தின்போது அதில் தொடர்புடைய மாணவனுக்கு 15 வயது என்பதால் திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில்  இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பளித்தார்.அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News